ராமநாதபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.1.65 லட்சம் மதிப்பிலான 11 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பிருந்தாவன் கார்டன் முதல் தெருவைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். இவர், குவைத் நாட்டில் பணியாற்றுகிறார். இந்நிலையில், இவரது மனைவி கார்த்திகாதேவி (30), வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த 17 ஆம் தேதி இளைய மகளுக்கு மருத்துவம் பார்க்க காரைக்குடி சென்றுவிட்டாராம். காரைக்குடியிலிருந்து சனிக்கிழமை (ஆக.24) மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு திறந்துகிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நெக்லஸ், சங்கிலி, மோதிரங்கள் என 11 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.65 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்திகாதேவி ஞாயிற்றுக்கிழமை மாலை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.