ராமநாதபுரம்

பேரிடர் மீட்புக் குழுக்களுக்கு பாதுகாப்பு உபரகணங்கள் வழங்கல்

27th Aug 2019 07:36 AM

ADVERTISEMENT

பேரிடர் காலங்களில் உதவும் வகையில், மீட்பு குழுவினர்களுக்கு உபகரணங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் திங்கள்கிழமை வழங்கினார். 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 
அதையடுத்து, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
கூட்டத்தின் முடிவில், சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கு உள்பட்ட குக்கிராமங்கள் அளவில் செயல்பட்டு வரும் மீட்பு குழுக்களுக்கு, பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களையும், முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்களையும் ஆட்சியர் வழங்கினார். 
அப்போது அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 180 கடலோர மீனவக் கிராமங்களில் பல்வேறு பேரிடர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 117 கடலோர மீனவக் கிராமங்களில் செயல்படும் குழுக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் த. ஹெட்சி லீமா அமலினி உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT