பரமக்குடி-எமனேசுவரம் பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு உறியடி உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன்பாக நடைபெற்ற விழாவில், கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், விசேஷ பூஜைகளும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சார்பில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. எமனேசுவரம் நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் உறியடி விழா நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டிருந்த தேங்காய்களை கம்புகளால் அடித்து உறியடி திருவிழாவில் பங்கேற்றனர்.
இதேபோல், எமனேசுவரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில், பெருமாள் சர்வ அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.