ராமநாதபுரம்

மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து 4 குழந்தைகளுடன் இலங்கை தம்பதி தலைமறைவு

23rd Aug 2019 07:03 AM

ADVERTISEMENT

மண்டபம் கேம்ப் அகதிகள் முகாமில் காவல் துறை பாதுகாப்பில் இருந்து வந்த தம்பதி 4 குழந்தைகளுடன்  தலைமறைவானதை அடுத்து, போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
         இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதயகலா, தயாபரராஜ் தம்பதி. இவர்கள், 3 ஆண்டுகளுக்கு முன் தங்களது 3 பெண் குழந்தைகளுடன் இலங்கையிலிருந்து படகில் தனுஷ்கோடிக்கு வந்தனர். அப்போது, தனுஷ்கோடி போலீஸார் இவர்களைக் கைது செய்து, விசாரணை நடத்தினர். 
      அதில், முன்னுக்குப் பின் முரணாக பேசிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கையில் உறவினர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டு மற்றும் போதைப் பொருள் விற்ற குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, 3 குழந்தைகள் உள்பட 5 பேரையும், ராமேசுவரம் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.      
       குழந்தைகள் தாயின்றி வாழ முடியாத நிலையில், உதயாகலா மற்றும் 3 குழந்தைகளை மண்டபம் கேம்ப் அகதிகள் முகாமில் சிறப்பு பாதுகாப்பில் வைக்கவும், தயாபரராஜை மட்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 3 குழந்தைகளுடன் உதயகலா மண்டபம் கேம்ப் முகாமில் இருந்துவந்தார். 
      அதன்பின்னர்,  தயாபரராஜ் விடுவிக்கப்பட்டு, அவரும் முகாமில் பாதுகாப்பில் வைக்கப்பட்டார். இத்தம்பதிக்கு அதன்பிறகு நான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கணவருக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி, மதுரை, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த மே 20 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக முகாமை விட்டு வெளியேறி, ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் தங்கியுள்ளனர். 
     அதையடுத்து, உதய கலா, தயாபரராஜ் முகாமுக்கு மீண்டும் திரும்பாததால், ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் சென்று பார்த்தபோது குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.     
     இது குறித்து  தனித் துணை வட்டாட்சியர் (குடியிருப்புகள் பிரிவு) ரவி மண்டபம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
     உதயகலா, பலரிடமும் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் மீது பண மோசடி புகார் கொடுக்கப் போவதை அறிந்த அவர், தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் தலைமறைவானதாகத் தெரிகிறது. இவர்கள், போலி கடவுச் சீட்டில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT