ராமநாதபுரம்

கமுதி அருகே கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ள கட்டடங்கள்: பொதுமக்கள் புகார்

23rd Aug 2019 07:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி சமையலறை கட்டடம்  இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால், சேதமடைந்த பழைய கட்டடத்திலேயே உணவு சமைக்கும் நிலை நீடிக்கிறது.
     கமுதி அருகே கோட்டைமேடு அரசு இணைப்பில்லம் துவக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைய கட்டடத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கப்படுகிறது. இது குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் மதிய உணவு திட்டத்தின் கீழ், ரூ.3.68 லட்சம் மதிப்பில் சமையலறையுடன் கூடிய பொருள்கள் வைப்பறை கட்டப்பட்டது.
      இக்கட்டடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், சேதமடைந்து அவ்வப்போது இடிந்து விழும் பழைய கட்டடத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்கப்படுகிறது.    
     எனவே, அரசு பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையலறைக் கட்டடத்தை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி அருகே திறக்கப்படாமல் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம்
      கமுதி அருகே பொந்தம்புளி ஊராட்சிக்குள்பட்ட வாழவந்தாள்புரத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக் குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்துக்காக கழிப்பறை வசதியுடன் கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளதால், கட்டடச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. 
     இதனால், கிராமப்புற பகுதிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அரசின் 35 வகையான சான்றிதழ்கள் பெறமுடியாமல், மாணவர்கள், கிராம விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால், இவர்கள் 24 கி.மீ. தொலைவிலுள்ள கமுதிக்குச் சென்று சான்றிதழ்களை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. 
     கட்டப்பட்ட நாளிலிருந்து திறக்கப்படாத மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் செயல்பாடின்றி இருப்பதால், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, இக்கட்டடத்தை மீண்டும் சீரமைத்து உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT