ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர்கள் 89 பேரின் வருங்கால சேம நல நிதி ரூ. 78 லட்சத்தை மோசடி செய்த கணினி பிரிவு தற்காலிக ஊழியரை 50 நாள்கள் கடந்தும் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இக் கோயிலில் 89 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கணினி பிரிவில் தொகுப்பு ஊழியத்தில் பணியாற்றி வருபவர் சிவன்அருள்குமரன். இவர் ஊழியர்களின் வருங்கால சேம நல நிதி பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் பணிகளை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4 நான்கு ஆண்டுகளாக 89 ஊழியர்களின் சேல நல நிதியை முறையாக அவர்களது கணக்கில் செலுத்தாமல் ரூ.78 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கோயில் இணை ஆணையர் கல்யாணி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ஜூன் 24 ஆம் தேதி கோயில் கணக்கர் ரவீந்திரன், கணினி பிரிவு ஊழியர் சிவன் அருள் குமரன் ஆகியோர் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர். இதையடுத்து சிவன் அருள் குமரன் தலைமறைவானார். இவரை தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சேம நல நிதி அலுவலகத்தில் 89 ஊழியர்கள் கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை கோயில் இணை ஆணையர் கல்யாணி தரப்பில் கேட்கப்பட்டது.
இதனையடுத்து, சேமநல நிதி அலுவலகத்தில் இருந்து 6 பேர் கொண்ட குழுவினர் ராமேசுவரம் கோயிலுக்கு வந்து, இது தொடர்பான 29 ஆவணங்களை எடுத்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 50 நாள்கள் கடந்து விட்ட நிலையில், இந்த ஆவணங்களை கோயில் ஆணையர் தரப்பில் திரும்ப கேட்டால், திரும்ப வழங்க மறுப்பதுடன், கோயில் அலுவலர்களை மிரட்டும் தொனியில் சிலர் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தலைமறைவான கணினி ஊழியரை கண்டு பிடிக்க முடியாமல் தற்போது வரை போலீஸார் திணறி வருகின்றனர்.
இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறியது: கோயிலில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற முறைகேட்டை கண்டுபிடித்து கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சேமநல நிதி அதிகாரிகள் கோயில் அதிகாரியை மிரட்டி வருகின்றனர் என்றார்.
குற்றவாளியை கைது செய்தால் தான் இந்த மோசடியில் இன்னும் வேறு யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து தெரியவரும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.