ராமநாதபுரம் நகரில் மின் சாதனங்கள் பழுது காரணமாக வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கி விடிய விடிய ஏற்பட்ட மின்தடை காரணமாக பொது மக்கள் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரம் நகர் பகுதிக்கு ஆர்.எஸ்.மடை, காவனூர் மற்றும் வழுதூர் பகுதிகளில் இருந்து துணை மின்நிலையங்கள் மூலம் மின்விநியோகம் நடந்துவருகிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் உயர்மின்கோபுரங்களில் இன்சுலேட்டர்கள் எனப்படும் பீங்கான் அமைப்பு சேதமடைந்தததால் தொடர்மின்தடை ஏற்பட்டது. ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலையிட்டதால் மின்தடை விரைந்து சீர்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டுவருகிறது. வெள்ளிக்கிழமை மாலையில் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் லேசான மழை தொடங்கி இரவு வரை நீடித்தது. இதற்கிடையே இரவு 9 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. இதனால், ராமநாதபுரம் நகர் இருளில் மூழ்கியது.
ஆர்.எஸ்.மடை பகுதியில் உயர்மின்கோபுரத்தில் இன்சுலேட்டர் பழுதால் மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய உதவி பொறியாளர்கள் தெரிவித்தனர். தடைபட்ட மின்சாரம் அதிகாலை 2 மணிக்கு அரண்மனை உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மீண்டும் விநியோகிக்கப்பட்டது. ஆனால், வண்டிக்காரத்தெரு, அரசு மருத்துவமனை பகுதி, கேணிக்கரை சாலை, ஓம்சக்தி நகர் என நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை வரை மின்தடை நீடித்தது.
மின்தடையால் வெள்ளிக்கிழமை இரவில் மக்கள் அவதிப்பட்டனர். மழையால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை இருந்தாலும், மின் விசிறிகளை இயக்கமுடியாததால், கொசுத் தொல்லை காரணமாக தூங்க முடியாமல் அவதிப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் நகர் மற்றும் பட்டிணம்காத்தான் பகுதிகளில் சனிக்கிழமை காலை மின்விநியோகம் அளிக்கப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இதனால், நகரில் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து நகர் மின்விநியோகப் பிரிவு உதவி செயற்பொறியாளர் ஜி. கங்காதரன் கூறியது: ஆர்.எஸ்.மடை பகுதி மின்விநியோகப் பிரிவில் இன்சுலேட்டர்கள் பழுதானதால், வெள்ளிக்கிழமை விடிய விடிய பழுதுநீக்கும் பணி நடந்தது. அதைச் சீராக்கிய நிலையில், அங்குள்ள மின்விநியோக பிரேக்கர் எனப்படும் சாதனம் பழுதாகியது. ஆகவே தொடர் பராமரிப்புப் பணியை மேற்கொண்டதால் மின்தடை ஏற்பட்டது. சிறப்பு குழு மூலம் மின்சாதன பழுதை நீக்கி விரைவில் மின்விநியோகம் சீராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.