திருவாடானையில் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள மகாலிங்கம் மூர்த்தி ஐயா கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை பல்வேறு காவடிகளை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா, கடந்த வெள்ளிக்கிழமை காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் அருகே உள்ள விநாயகப் பெருமான் கோயிலில் இருந்து பால் காவடி, பறவைக் காவடி, மயில் காவடி, வேல் காவடி, தீச் சட்டி காவடி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர்.
பின்னர், கோயில் முன்பாக உள்ள பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். இதில், சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, இரவு வாணவேடிக்கைகளும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.