கமுதி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் சனிக்கிழமை உடல் முழுவதும் சேறு பூசி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே உள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் முளைப்பாரி திருவிழா, கடந்த 9 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இவ்விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை, உடல் நலம் பெற வேண்டியும், விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க வேண்டியும் அதிகாலையில் தங்களது உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு, மேள, தாளங்கள் முழங்க, நூற்றுக்கும் மேற்பட்டோர் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
மேலும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற, கரும்பால் தொட்டில் தூக்கியும், அக்கினிச் சட்டி சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.