ராமநாதபுரம்

கிராமசபை கூட்டம் - சமபந்தி விருந்து: ராமநாதபுரம் ஆட்சியர் பங்கேற்பு

16th Aug 2019 07:40 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் மேதலோடைக் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை பங்கேற்றார். மேலும், அவர் சமபந்தி விருந்திலும் கலந்துகொண்டு பொதுமக்களுடன் உணவருந்தினார்.
       ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ளது, மேதலோடை கிராமம். இங்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்  கொ.வீர ராகவ ராவ் கலந்துகொண்டார். கூட்டத்தில், ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரகப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. 
   மேலும், கிராம திட்ட செலவின விபரம், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், முழு சுகாதார இயக்கம், நெகிழிப் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்தும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம் மற்றும் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர் விவரங்களை உறுதிபடுத்துதல் தொடர்பான வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தையும் பொதுமக்களிடம் ஆட்சியர் உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர்.
    கூட்டத்தில் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் ஒருவருக்கு அடையாள அட்டையும், மற்றொருவருக்கு தென்னை மரக்கன்றையும் ஆட்சியர் வழங்கினார்.
  கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி,  வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (வேளாண்மை) எஸ்.சேக்அப்துல்லா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 சமபந்தி விருந்து: ராமநாதபுரம் குண்டுகரை முருகன் திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர் கே.பழனிவேல் பாண்டியன் உடனிருந்தார்.
பேரையூரில்
கமுதி அருகே பேரையூரில் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில், கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். 
  கூட்டத்தில் பேரையூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களிலுள்ள நீர்நிலைகள், சாலையோரங்களில் பனை மரம் நடுதல், குளியல் தொட்டிகளை தேவையான எண்ணிக்கையில் அமைப்பது, மராமத்து செய்யப்படாத கிராம சாலைகளை சீரமைக்க வலியுறுத்துதல், கிராமங்களுக்கு பேருந்து வசதி, கண்மாய் குளங்கள் தூர்வாருதல்,  கழிவுநீர் வாய்க்கால், கால்வாய்களை சீரமைத்தல், அரசு மானியத்தில் கழிப்பறை அமைத்தல், இளைஞர்களுக்கு விளையாட்டு பொருள்கள் வழங்குவது ஆகிய 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 
 நிகழ்ச்சியில் பேரையூர் மக்கள் பாதை ஊராட்சி பொறுப்பாளர் மனோஜ் பிரபாகரன், சேர்ந்தகோட்டை திட்ட பொருப்பாளர் பாபு, திட்ட உறுப்பினர்கள் சூரிய பிரகாஷ், யோககுமார், புது வாழ்வுத் திட்ட உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT