ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் 350 சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இந்து முன்னணி மாவட்டத்தலைவர் கே.ராமமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் செப். 2 முதல் 4 ஆம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடத்த திட்டமிட்டுள்ளளோம். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று 3 அடி முதல் 9 அடி வரையிலான விநாயகர் சிலைகள் 350 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
3 ஆம் தேதி ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, திருப்புல்லாணி, தேவிபட்டணம் ஆகிய ஊர்களில் ஊர்வலங்கள் நடைபெறும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது தெய்வீக தமிழை காப்போம், போலி தமிழ் வாதத்தை முறியடிப்போம் என்ற கருப்பொருளுடன் விழா நடைபெறும். மேலும் விநாயகர் சதுர்த்தி நடத்தும் விழா குழுவினர் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்ட்டராப்பாரீஸால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த திருமேனிகளை வைத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில், இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள், திருவிளக்கு பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்த வேண்டும். இந்த விழாவுக்கு தமிழக அரசு விநாயகர் சிலைக்கு பந்தல் அமைத்து கொடுத்து, பூஜை பொருள்கள் வழங்குவதுடன் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.