டெங்கு பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் சித்த பிரிவு சார்பில் ஆயிரம் கிலோ நிலவேம்பு பொடியை வாங்குவதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்குகாய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருந்தை விட சித்த மருந்து நன்றாக பலனளிப்பதால் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மழைக்காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயிரம் கிலோ அளவிற்கு நிலவேம்பு குடிநீர் வாங்குவதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 25 இடங்களில் சித்த மருத்துவபிரிவு செயல்படுகிறது. பார்த்திபனுôர், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சித்த மருத்துவப் பிரிவிற்காக தனிக் கட்டடம் கட்டுவதற்கு அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை மாவட்டம் என்பதால் தோல் சம்பந்தமான நோய்களுக்காக அதிகம் பேர் சித்த மருத்துவப் பிரிவிற்கு வருகை தருகிறார்கள். தாய்மை அடையும் பெண்களுக்கு சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் அம்மா மகப்பேறு சஞ்சீவி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏராளமான பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார்.