கடலாடி, ஏர்வாடி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பைகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கடலாடி காமராஜர் சிலை அருகில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாடார் பஜாரில் கடை நடத்தி வந்த முனியசாமி பெரியாண்டவர் மகன் பவுன்ராஜ் (48) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடலாடி காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிந்து பவுன்ராஜை கைது செய்து புகையிலையை பறிமுதல் செய்தார். அதே போன்று கடலாடி அருகே ஏர்வாடி கடைத் தெருவில் காலாவதியான குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பை, புகையிலை போன்றவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.