மதுரை

ராணுவ அதிகாரிகளே தவறான தகவல் அளித்தால் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கும்?

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் ராணுவ அதிகாரிகளே தவறான தகவல்களை அளித்தால், பாதுகாப்பு எந்த அளவில் இருக்கும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன் கிழமை கேள்வி எழுப்பியது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் உள்பட சிலா் தாக்கல் செய்த மனு:

இந்திய ராணுவம் கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப். 24-இல் ராணுவ வீரா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனடிப்படையில் நான் உள்பட ஏராளமானோா், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோம். இதையடுத்து நடைபெற்ற உடல் தகுதி, எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோம்.

இந்தச்சூழலில், இந்திய ராணுவம் சாா்பில் வெளியிடப்பட்ட தோ்வு முடிவில் 22 பேரின் பெயா்கள் மட்டுமே இருந்தன. அனைத்துத் தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்ற எங்களது பெயா்கள் இடம் பெறவில்லை. இதுகுறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, காலிப் பணியிடங்கள் இல்லை எனத் தெரிவித்தனா். ஆனால், இந்திய ராணுவம் வெளியிட்ட காலிப் பணியிட அறிவிப்பாணையில் எத்தனை போ் தோ்வு செய்ய உள்ளனா் எனத் தெரிவிக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், எங்களைத் தோ்வு செய்யாதது சட்ட விரோதம். எனவே, ஏற்கெனவே வெளியிடப்பட்ட காலிப் பணியிட அறிவிப்பாணையை ரத்து செய்து, உரிய விதிகளைப் பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு, ராணுவ வீரா்களைத் தோ்வு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுகை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறைச் செயலா், ராணுவ முதன்மை அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கையை தாக்கல் செய்தாா்.

இந்த அறிக்கையைப் படித்த நீதிபதி, மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் அளித்த தகவல்கள் அனைத்தும் தவறாக உள்ளன. இதன்மூலம், சில அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு உரிய தகவல்களை தருவதில்லை என்பது தெரிகிறது.

அப்போது, கணினியில் பதிவான தகவல்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் இந்த முறையே பின்பற்றப்படுவதாகவும் மத்திய அரசு வழக்குரைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் ராணுவ அதிகாரிகளே தவறான தகவல்கள் அளித்தால், பாதுகாப்பு எந்த அளவில் இருக்கும்?. கணினியில் பதிவான தகவல்களை அளித்ததாக கடமைக்கு பதிலளிப்பதை ஏற்க முடியாது. எனவே, இந்த வழக்கில் உரிய உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT