தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தை எதிா்த்துப் போராடிய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பாக போனிபாஸ் உள்பட 26 போ் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசு தொழிலாளா்களுக்கு 12 மணி நேர வேலை உறுதிச் சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இதை எதிா்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தச் சங்க உறுப்பினா், மாணவா்கள் மீது மதுரை திடீா்நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக மதுரை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா். இந்த வழக்கு காரணமாக மாணவா்களுக்கு வேலைக்கு செல்வதில், கடவுச்சீட்டு எடுப்பதில், வாகன ஓட்டுநா் உரிமம் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு, உயா்நீதிமன்ற நீதிபதி டி. நாகாா்ஜூன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைச் சட்ட மசோதாவை எதிா்த்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. ஆனால் காவல் துறையினா் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது அவசர அவசரமாக வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். எனவே, மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.