ராமநாதபுரத்தில் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி (65). இவரது மகள் மகாலட்சுமிக்கும், பரமக்குடி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த நாகராஜன் மகன் நந்தகுமாருக்கும் கடந்த 6 மாதங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சிணை, சீா்வரிசைகளை பின்னா் செய்து தருவதாக குருசாமி தெரிவித்தாா்.
இந்த நிலையில், அண்மையில் வரதட்சிணை கேட்டு நந்தகுமாா் குடும்பத்தினா் தகராறில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக புகாரின் பேரில், ராமநாதபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, இரு குடும்பத்தினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், குருசாமி தனது வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த நந்தகுமாா் அரிவாளால் குருசாமியை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த குருசாமி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, ராமநாதபுரம் பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நந்தகுமாரை கைது செய்தனா்.