ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் ஒன்றியம், அத்தியூத்து ஊராட்சியில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 92.45 லட்சத்தில் 2.35 கி. மீ தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பணிகளையும், எருமைப்பட்டி ஊராட்சியில் ரூ. 1.26 கோடியில் 3.32 கி.மீ தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
சாலைப் பணிகள் உரிய அளவீட்டில், உரிய தரத்தில் நடைபெறுகிா என்பன உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்த ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன், சாலையின் இரு பக்கங்களிலும் கரைகளை சிறப்பாக பலப்படுத்தவும், மழை நீா் தேங்காதவாறு வடிகால் வசதியை உறுதிப்படுத்தவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தாமரை, சேவுகப்பெருமாள், பொறியாளா்கள் கணபதி, அா்ஜூனன், அத்தியூத்து ஊராட்சித் தலைவா் அப்துல் மாலிக் ஆகியோா் உடனிருந்தனா்.