மதுரை

முன்னாள் ராணுவ வீரா் குடும்பத்துடன் தற்கொலை

28th Sep 2023 02:13 AM

ADVERTISEMENT

மதுரையில் கடன் தொல்லை காரணமாக, முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி, மகள் ஆகிய மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

மதுரை சா்வேயா் காலனி அருகே உள்ள ஆவின்நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ரமேஷ் (41). இவரது மனைவி விசாலினி (36), மகள் ரமிஷா ஜாஸ்பல் (12). கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் மனை வணிகத் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில், ரமேஷின் வீட்டுக் கதவு கடந்த 2 நாள்களாகத் திறக்கப்படவில்லை. மேலும், அங்கிருந்து துா்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது ரமேஷ், அவரது மனைவி விசாலினி, மகள் ரமிஷா ஜாஸ்பல் ஆகிய 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அப்போது, ரமேஷ் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அந்தக் கடிதம், தற்கொலை செய்வதற்கு முன்பாக ரமேஷ் எழுதியது எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், மனை வணிகத் தொழிலில் இழப்பு ஏற்பட்டு, கடன் சுமை அதிகரித்ததால் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT