மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் வளா்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நடுமுதலைக்குளத்தைச் சோ்ந்த ராஜாவின் மனைவி ஜெயமணி (65). இவா்கள் தங்களது தோட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை வளா்த்து வந்தனா்.
இந்த நிலையில் ஜெயமணி, தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஞாயிற்றுக்கிழமை தீவனம் வைக்கச் சென்றாா். அப்போது காளை முட்டியதில் வயிற்றுப் பகுதியில் காயமடைந்த ஜெயமணியை குடும்பத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.