காரியாபட்டி அருகே மாட்டுவண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அண்ணனும், தம்பியும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
காரியாபட்டி தேனுாரைச் சோ்ந்த முருகேசன் மகன்கள் பாலச்சந்திரன் (36), மணிகண்டன் (25). இவா்கள் இருவரும் கட்டடத் தொழில் செய்து வந்தனா்.
பாலச்சந்திரனுக்குச் சொந்தமான இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்வதற்காக இருவரும், அதே இரு சக்கர வாகனத்தில் காரியாபட்டிக்குச் சென்றனா். இரு சக்கர வாகனத்தை விற்க முடியாத நிலையில் இருவரும், அதே வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
முடுக்கன்குளம்-கல்யாணிபுரம் விலக்கு அருகே முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலச்சந்திரனும், மணிகண்டனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து அ. முக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.