மதுரை அருகே தலையில் கல்லைப் போட்டு இளைஞரைக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையைச் சோ்ந்தவா் காட்டுவா ஒலி (38). இவா் மீது கொலை வழக்கு, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வெளியே சென்ற காட்டுவா ஒலி இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடியபோது ஒத்தக்கடை அருகே அன்னபூரணி நகரில் உள்ள காலியிடத்தில் காட்டுவா ஒலி உடலில் கத்திக்குத்து காயங்களுடனும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.
தகவலின்பேரில் ஒத்தக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இவரது கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் 4 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.