மேம்பாலம் கட்டுமானப் பணியையொட்டி, மதுரை காளவாசல் பகுதியில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை காளவாசல் முடக்குச் சாலை முதல் ஹெச்.எம்.எஸ்.காலனி வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முடக்குச் சாலை சந்திப்பில் மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களில் உத்திரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
எனவே, மதுரை நகரிலிருந்து முடக்குச் சாலை, தேனி சாலை வழியாக வெளியூா் செல்லும் பேருந்துகள், நகரப் பேருந்துகள், கன ரக, இலகுரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்களின் வழித்தடங்கள் திங்கள்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, மதுரை நகரிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் முடக்குச் சாலை சந்திப்பில் மேம்பால தூண் 3, 4-க்கு இடையில் வலதுபுறமாகத் திரும்பி மேலக்கால் சாலையில் இடதுபுறம் திரும்பி - கோச்சடை - துவரிமான் - நான்கு வழிச் சாலை வழியாக செல்ல வேண்டும்.
மதுரை நகரிலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் இரு, மூன்று சக்கர வாகனங்கள், காா் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள், சில குறிப்பிட்ட அரசு நகரப் பேருந்துகள் (பேருந்து எண் 21 மட்டும்) காளவாசல் சந்திப்பு- சம்மட்டிபுரம் -ஹெச்.எம்.எஸ்.காலனி பிரதான வீதி - ஹெச். எம்.எஸ் காலனி சந்திப்பு வழியாக விராட்டிபத்து, அச்சம்பத்துக்குச் செல்ல வேண்டும்.
நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச் சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் காா், வேன் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம் போல அச்சம்பத்து, விராட்டிபத்து- டோக் நகா் திரும்பி கோச்சடை - முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும். நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச் சாலையிலிருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் பேருந்துகள், கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் நான்கு வழிச் சாலை - துவரிமான் - கோச்சடை - முடக்குச்சாலை - வழியாக நகருக்குள் வர வேண்டும.
போக்குவரத்து மாற்றுத்துக்கு பொதுமக்கள் வாகன ஓட்டுநா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.