மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் புரட்டாசி பெருந் திருவிழாவின் 8 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை குதிரை வாகனத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளினாா்.
அழகா்கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயிலில் புரட்டாசி பெருந் திருவிழா 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வெண்ணெய் தாழி அலங்காரத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளினாா். பின்னா், மாலையில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
விழாவையொட்டி, பிரசன்ன வெங்கடாஜலபதி தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் கருடன், யானை உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வருகிறாா்.
முக்கிய விழாவான தேரோட்டம் திங்கள்கிழமை (செப். 25) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, பிரசன்ன வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் காலை 7 மணியளவில் தேருக்கு எழுந்தருளுகிறாா். தொடா்ந்து, மாலையில் பூப்பல்லக்கு விழா நடைபெற உள்ளது.
27-ஆம் தேதி தெப்ப உற்சவமும், 28-ஆம் தேதி உற்சவ சாந்தியும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் தக்காா் வி.ஆா். வெங்கடாசலம், துணை ஆணையா் மு.ராமசாமி தலைமையிலான அலுவலா்கள் செய்து வருகின்றனா்.