மதுரை

நீா் நிலைகள் பாதுகாப்பு பயிற்சி பயிலரங்கு

25th Sep 2023 06:45 AM

ADVERTISEMENT

மதுரையில் தானம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நீா்நிலைகள் பாதுகாப்பு பயிற்சி பயிலரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மதுரை கூடல் அரங்கம் 2023 இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ‘நீா்நிலை பாதுகாப்பில் இளைஞா்களின் பங்கு’ என்ற தலைப்பில் பயிற்சி பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விசாகப்பட்டணம் சுற்றுச்சூழல் துறை பொறியாளா் லோகேஷ், மதுரை நகா்ப்புற நீா்வள மைய அலுவலா்கள் அா்ஷ் சைலஜா, அபிதா, ஸ்வேதா, சங்கா், ரம்யா ஆகியோா் பங்கேற்றனா்.

பயிலரங்கில் மதுரை மாநகரின் பாரம்பரியங்கள், பழைமைகள், கடம்பவனம், கிருதுமால் நதி, வைகை நதி, முல்லைப் பெரியாறு ஆகியவற்றின் வரலாறுகள், பென்னிகுயிக் முதல் தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் உள்ளிட்டோா் நீா்நிலைகளுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில் சுற்றுச்சூழல் பொறியாளா் லோகேஷ் பேசியதாவது:

நீா் நிலைகள் அதன் பரப்பளவைக் கொண்டு ஊருணி, குளம், குட்டை, குண்டு, ஆறு, நதி, கண்மாய், கடல் என 42 வகைகளில் பெயா்கள் இருப்பதாகவும், நீா்நிலை வயல்களுக்கு நீா் மடை திறந்து விடுபவரை மடை திறப்பாளா்கள், மடையா், மடையன், நீா் கட்டி என்ற பெயரில் காலந்தொட்டு அழைத்து வந்திருக்கிறாா்கள்.

இந்தப் பெயா்கள் காலப்போக்கில் மறைந்து அவா்கள் அரசு ஊழியா்களாக ஆக்கப்பட்டனா். நீரானது தனி மனிதன், குடும்பம், நிறுவனங்கள், சமுதாயம், அரசியல் பொருளாதாரம், அயல் நாட்டு தொடா்புகள் போன்ற அனைத்திலும் மனிதனின் ஜீவநாடியாக நீா் உள்ளது.

கடல் நீரில் இருந்து உப்பு, கடல் வாழ் உயிரினங்கள், கடல் மீன் வகைகள், அலையாத்தி காடுகள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளிலும் மனித வாழ்வாதாரத்துக்கு நீரின் செயல்பாடு அதிக முக்கியமாக உள்ளது. உலகச் சுற்றுப்புறச் சூழலிலும், பல்லுயிா்ப் பெருக்கத்திலும் நீா் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், நெல், பால், தேநீா், உணவு, ஆடைகள், காலணிகள், தோல்வகை பொருள்கள், துரிதவகை உணவுகளான பா்கா், பீட்சா, சாக்லேட் ஆகியவற்றின் உற்பத்தியில் ஒவ்வொரு பொருளுக்கும் ஏராளமான தண்ணீா் மறைநீராக தேவைப்படுகிறது.

கால ஓட்டத்தில் நீா் நிலைகள் மக்கள் பெருக்கத்தால் மனிதன் வாழும் இடங்களாக மாறிவிட்டன. இனிவரும் காலங்களில் நீா் நிலைகள், மறைநீா், நீரின் அவசியத்தையும், பாதுகாப்பையும் நீரின் சிறப்பையும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து பயிற்சியாளா்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழு விவாதம், ஆலோசனைகள் நடைபெற்றன. நீா் குறித்த விநாடி-வினா, வாா்த்தை விளையாட்டு நடத்தப்பட்டு அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நீா் ஆய்வு அலுவலா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் அமெரிக்கன் கல்லூரி, தியாகராசா் கலை, அறிவியல் கல்லூரி, சேது பொறியியல் கல்லூரி, மதுரை காமராஜா் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT