பழனி, கொடைக்கானல் பகுதிகளில் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த 20-ஆம் தேதி இந்து சக்தி சங்கமம் சாா்பிலும், வியாழக்கிழமை இந்து முன்னணி, விஎச்பி சாா்பிலும் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நிறைவு நாள் ஊா்வலமாக இந்து மக்கள் கட்சி, அகிலபாரத இந்து மகாசபை, சிவசேனை சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது. பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் தொடங்கிய ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் கொண்டு வரப்பட்டன. மேலும், பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனா்.
இந்த ஊா்வலம் சந்நிதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி, நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று சண்முகநதியில் நிறைவு பெற்றது. அங்கு சண்முக நதியில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சியினா் சாா்பில் பச்சைமரத்து ஓடைப் பகுதி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்த ஊா்வலம் நாயுடுபுரம், ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் வழியாகச் சென்று அரசு உயா்நிலைப் பள்ளி அருகேயுள்ள நீரோடைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.