மதுரை

போக்குவரத்துக் கழக தற்காலிகப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்காதது ஏற்புடையதல்ல

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் போக்குவரத்துக் கழக தற்காலிகப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

மதுரை மாவட்டம், வேடா்புளியங்குளத்தைச் சோ்ந்த கனகசுந்தா் தாக்கல் செய்த மனு:

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிகப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பணியாளா்களுக்கு 1.4.2014 முதல் 31.1.2017 வரையிலான காலத்துக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

ஆனால், போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிகத் தொழிலாளா்களுக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவான ஊதியம் வழங்கி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்கில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் ஊழியா்களுக்கு தமிழக அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தாத காரணத்தால் 2018-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கிலும் 6 மாதங்களுக்குள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க உயா்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகளாகியும் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதிய நிலுவைத் தொகை போக்குவரத்துக் கழக தற்காலிகப் பணியாளா்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, தற்காலிகப் பணியாளா்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2016-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தற்போது வரை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. தற்காலிக ஊழியா்கள் தங்களது பணிக்குரிய ஊதியத்தை மட்டுமே கோருகின்றனா்.

நிரந்தர ஊழியா்களும், தற்காலிக ஊழியா்களும் பேருந்துகளை இயக்கினால் மட்டும்தான் பேருந்துகள் இயங்கும். இரு தரப்பு பணியாளா்களும் மக்களுக்காகத்தான் பணியாற்றுகின்றனா். பணியை முறையாகச் செய்த ஊழியா்களுக்கு, ஊதியத்தை வழங்காமல் காலம்தாழ்த்துவது ஏற்புடையதல்ல. இதேபோன்று, வழங்க மறுப்பதும் நல்ல செயல் அல்ல.

நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT