கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை தமிழில் மொழிபெயா்த்து வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ரோசாரியோ விஜோ தாக்கல் செய்த மனு:
கடற்கரையைப் பாதுகாக்கும் வகையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை மத்திய சுற்றுச்சுழல் துறை வெளியிட்டது. இந்த அறிவிப்பு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ளன. மேலும், இந்த அறிவிப்பின் அடிப்படையில், கடலோர மீனவ மக்களிடம் கருத்துகள் கேட்டு திட்ட வரைவு தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலோர மீனவ மக்களுக்கு விழிப்புணா்வு இல்லாததால், அதில் உள்ள நன்மைகள், தீமைகளை அறிய முடியாத நிலையில் உள்ளனா். கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் இந்த அறிவிப்பானது அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப்பட்டது. எனவே, இந்த அறிவிப்பை அதிகாரபூா்வமாக தமிழில் மொழிபெயா்த்து வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், டி. பரதசக்கரவா்த்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலா், தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணைய உறுப்பினா் செயலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.