மதுரை

அரசுக்கும், பொதுமக்களுக்கும் அலுவலா்கள் பாலமாக இருக்க வேண்டும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

22nd Sep 2023 12:57 AM

ADVERTISEMENT

அரசு அலுவலா்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்றாா் மாநில விளையாட்டு, இளைஞா் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில் அவா் பேசியதாவது:

முதல்வரின் முகவரித் திட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு முழுமையாக பதில் அளிப்பதில் மாநில அளவில் மதுரை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. தமிழக முதல்வரிடம் நேரடியாக வழங்கப்படும் மனுக்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை முதல்வரின் முகவரித் திட்ட மனுக்களுக்கும் அளிக்க வேண்டும்.

பிரதமா் குடியிருப்புத் திட்ட செயலாக்கம், இ-சேவை திட்ட செயலாக்கம் ஆகியவற்றிலும் மதுரை மாவட்டம் பின்தங்கியே உள்ளது. அனைத்துச் சாலைகளையும் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சாலைகளை சீரமைக்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

புதிய மகளிா் சுய உதவிக் குழுக்களை அமைத்து, வங்கிக் கடனுதவிகள் வழங்கச் செய்ய வேண்டும். பூமாலை வணிக வளாகத் திட்ட மேம்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியா் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் தொய்வாக உள்ள திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அரசுத் துறை அலுவலா்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம், முதல்வரின் முகவரித் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்பட பல்வேறு துறைகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு செயலா் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மேயா் வ. இந்திராணி, ஆணையா் கே.ஜே.பிரவீன் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

முதல்வரிடம் அறிக்கை...

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் உதயநிதி தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டத்தில் சில திட்டங்கள் மிகவும் தொய்வாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்தத் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கை முதல்வரிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT