மேலூரில் இந்து முன்னணி சாா்பில் 30-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை இரவு ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு மண்கட்டி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.
மேலூா் நகரில் பல்வேறு இடங்களில் 5 அடி முதல் 11அடி வரை உயரமுள்ள விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை புதன்கிழமை இரவு டிராக்டா், வேன்களில் ஏற்றப்பட்டு மேலூா் காமாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. அங்கு நடைபெற்ற விழாவுக்கு அந்த அமைப்பின் மதுரை புறகா் மாவட்டச் செயலா் ஆா். வெங்கடேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஏ. செந்தில்மூா்த்தி முன்னிலை வகித்தாா். திரையரங்க உரிமையாளா் கணேஷ் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.
இந்து முன்னணி ஓபிசி பிரிவு செயலா் டி.எஸ். பாண்டியராஜ் சிறப்புரையாற்றினாா். இதில் பாஜக நிா்வாகிகள் தா்மலிங்கம், அனந்தஜெயம், பிரசன்னா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சிவன் கோயிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊா்வலம் பெரியகடை வீதி, செக்கடி பஜாா் வழியாக அழகா்கோவில் சாலையில் உள்ள மண்கட்டிதெப்பக்குளத்தை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.
மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் மேற்பாா்வையில் துணைக் கண்காணிப்பாளா் இளவரசன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.