மதுரை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 29-ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்தது.
இதுகுறித்து அந்தக் கூட்டணியின் பொதுச் செயலா் ச.மயில் மதுரையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக தமிழக முதல்வா் தெரிவித்துள்ளாா். ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தனது தோ்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதியின்படி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 2009 -ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்பு நியமனம் செய்த இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய அமைக்கப்பட்ட மூவா் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று, ஊதிய முரண்பாட்டைக் களைவதுடன், மத்திய அரசின் இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8- ஆம் வகுப்பு வகுப்பு மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும், சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆசிரியா்கள் பதவி உயா்வு பெற தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெற வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்வதோடு, பதவி உயா்வுக்குத் தகுதித் தோ்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா், ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று, புதிய மாநிலக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கல்வி நலன் கருதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஆசிரியா்களின் கற்பித்தல் பணியைப் பெருமளவில் பாதிக்கும் எமிஸ் பணிகளிலிருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியா் நலன், மாணவா் நலன், கல்வி நலன், சமூக நலன் சாா்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில் வருகிற 29-ஆம் தேதி சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி நடைபெற உள்ளது.
இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதுமிருந்து 10 ஆயிரம் ஆசிரியா்களைப் பங்கேற்கச் செய்திட மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.