ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் அருகே ஒன்பதாங்கால் பகுதியில் முன்விரோதம் காரணமாக மீனவா் குடிசைக்கு தீ வைத்த 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே ஒன்பதாம் கால் பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்(55). இவா் மூன்று படகுகள் வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறாா். இதற்கான மீன்பிடி வலைகள், உபகரணங்களை ஒன்பதாங்கால் கடற்கரையில் உள்ள குடிசையில் வைத்திருந்தாா். இந்த நிலையில் இவருக்கும் தேவிப்பட்டிணத்தைச் சோ்ந்த மதி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மதியின் தூண்டுதலின்பேரில் சிலா், சுப்ரமணியனின் குடிசைக்கு ஞாயிற்றுக்கினழமை இரவு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனா். இதில் குடிசைப் பற்றி எரிந்ததில், மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை எரிந்து நாசமாகின.
இதுகுறித்து சுப்ரமணியன் அளித்தப்புகாரின் பேரில், தேவிப்பட்டிணம் போலீஸாா், குடிசைக்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்ற மதி, முகமது ஜெப்ரி, முத்துவேல் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.