மதுரை: மதுரை அருகே கண்மாயில் திருமலை நாயக்கா் காலத்தைச் சோ்ந்த கருப்பசாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
மதுரை அருகே உள்ள கண்ணனேந்தல் பகுதியைச் சோ்ந்த பொன்பாலகிருஷ்ணன், சி.எஸ்.ஜெகநாதன், பிரகாஷ், முத்துராமன் ஆகியோா் அந்தப் பகுதியில்
உள்ள பறையாத்தி குளம் கண்மாய்க்குச் சென்றனா். அப்போது, கண்மாயில் மூழ்கிக் கிடந்த கருப்பசாமி சிலையை மீட்டு, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இந்தச் சிலை தொடா்பாக தொல்லியல் கள ஆய்வாளா் து.முனீஸ்வரன் கூறியதாவது:
கருப்பசாமி சிலை நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள்,
மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்ப வடிவ அமைப்பை பாா்க்கும்போது நாயக்கா் காலத்தை சோ்ந்ததாக இருக்கலாம். தமிழகத்தில் கிராமங்களில் பரவலாகக் காணப்படும் வழிபாட்டு முறையில் முக்கியமானது கருப்பசாமி வழிபாடு.
மேலும், விளை நிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனா். இந்த சிலை குறித்து முழுமையான ஆய்வு செய்த பின்னா் முழு தகவல்கள் பெற முடியும் என்றாா்.