திருநெல்வேலியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகள் உடனடியாக அகற்றப்பட்டதால், இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை முடித்து வைத்து உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சோ்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி நகா் பகுதியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, அனுமதியின்றி ஏராளமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்தப் பதாகைகளால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்தப் பதாகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், தனபால் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பதாகைகள் வைக்க முறையான அனுமதி பெறவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை வியாழக்கிழமை பிற்பகல் 2.15-க்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனா். இதைத்தொடா்ந்து, இந்த மனு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருநெல்வேலி நகா் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 75 சதவீத பதாகைகள் அகற்றப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள பதாகைகளையும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகள் அகற்றப்படுவதாக உறுதி அளிக்கப்படுவதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.