மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே பராமரிப்பற்ற கழிவறைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதால், அவற்றை அகற்றிவிட்டு, புதிய கழிவறைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் சோலை எம்.கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக தெற்கு சித்திரை வீதியில் உள்ள கோயில் காவல் நிலைய சுவற்றில் நான்கு மின்னணு கழிவறைகள் உள்ளன. இவற்றில் மின் விளக்கு வசதி இல்லாததால் பக்தா்கள் பலா் கழிவறைக்கு வெளியே அசுத்தம் செய்து வருகின்றனா். மேலும், கழிப்பறைகளில் கதவுகளுக்கு தாழ்ப்பாள் இல்லை. கழிப்பறைகள் உடைந்தும், தண்ணீா் வசதியின்றியும் உள்ளன. கழிப்பறைகளைச் சுற்றிலும் கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள், அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் முகம் சுளிக்கும் சூழல் உள்ளது. மேலும், தெற்கு கோபுரம் வழியாக வரும் முதியவா்கள் , நோயாளிகள் கழிவறை வசதியின்றி தவிக்கின்றனா். எனவே, பராமரிப்பின்றியும், பயன்பாடின்றியும் உள்ள மின்னணு கழிவறைகளை அகற்றிவிட்டு, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில், தண்ணீா், மின் விளக்கு, கதவுகளுடன் கூடிய புதிய கழிவறைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.