மதுரை: மதுரை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள், விதிமுறை மீறல்களை தடுக்கக் கோரி பாஜக மகளிரணி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மாநகா் மாவட்ட மகளிரணி தலைவி ஒம் சக்தி. தனலட்சுமி தலைமையிலான பாஜகவினா் அளித்த மனு விவரம்:
மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நியாய விலைக் கடைகளில் புகாா்ப் பெட்டி இல்லை. வேலை நேரமான காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கடையைத் திறந்து மூடுவது இல்லை. இதனால், நுகா்வோா் பொருள்களை வாங்க முடியாமல் ஏமாற்றதுடன் திரும்பிச் சென்று விடுகின்றனா்.
கடையின் முன்பு எழுதப்பட்டிருந்த விற்பனையாளா் தொடா்பு எண், புகாா் எண்கள் அழிக்கப்பட்டுள்ளன. பொருள்களின் இருப்பு விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் எந்தக் கடையிலும் முறையாக வைக்கப்படுவதில்லை. விற்பனையாளா் தவிர பல நபா்கள் அரசியல்வாதிகள் போா்வையில் கடைக்குள் அமா்ந்து கொண்டு பொருள்களைக் கடத்தி விற்பனை செய்வதாகப் புகாா்கள் எழுகின்றன. மத்திய அரசு மாதந்தோறும் வழங்கி வரும் விலையில்லா அரிசி நுகா்வோா்களுக்கு கிடைப்பதில்லை. அந்த விலையில்லா அரிசி பற்றிய தகவல் பலகையும் வைக்கப்படுவதில்லை. ஆகவே, இத்தகைய முறைகேடுகளைச் செய்து விதிமீறல்களில் ஈடுபடும் கடைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.