பரவை பெண்கள் கல்லூரி அருகே வியாழக்கிழமை நள்ளிரவில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், பரவை தனியாா் சுயநிதி பெண்கள் கல்லூரி அருகே மீனாட்சிநகா் 5-ஆவது குறுக்குத் தெரு உள்ளது. இங்கு வியாழக்கிழமை நள்ளிரவில் சிலா் இளைஞரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனா்.
தகவலின் பேரில், சமயநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவா், மதுரை தத்தனேரி மேலகைலாசபுரம் பண்டிதா் தெருவைச் சோ்ந்த பழனி மகன் ராம்குமாா் (25) என்பதும், பரவை காய்கறி சந்தையில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் காரமாசி வீதியைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் தென்னரசு (28), செல்லூா் படித்துறை பகுதியைச் சோ்ந்த குமாா் (எ) இளவரசன் (33) ஆகியோருக்கு கொலையில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.