மதுரை

குடியிருப்பு அருகே காற்றாலை அமைக்கும் பணி: தூத்துக்குடி ஆட்சியா் பதில் அளிக்க உத்தரவு

19th May 2023 02:34 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், மேல்தட்டப்பாறை கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடா்பான வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த கிஷோா்குமாா் தாக்கல் செய்த பொதுநல மனு:

தூத்துக்குடி மாவட்டம், மேல்தட்டப்பாறை கிராமம் அருகே காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதியிலிருந்து 500 மீ. சுற்றளவுக்குள் காற்றாலைகள் அமைக்கக் கூடாது என அரசாணை உள்ளது.

ஆனால், சிறுவா் சீா்திருத்தப் பள்ளி, மருத்துவா்கள் குடியிருப்பு, ஊழியா்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியிலிருந்து 150 மீ தொலைவில் காற்றாலைகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதுடன், உடல்நலக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, குடியிருப்பு அருகே காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா, நீதிபதி எல். விக்டோரியா கெளரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதில் அளிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT