ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, வேப்பங்குளம் பகுதிகளில் பட்டா நிலங்களிலிருந்து மணல் கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக வருவாய்த் துறை, போலீஸாா் அடங்கிய குழுவினா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கடலாடியைச் சோ்ந்த விவசாயி எம். முருகன் தாக்கல் செய்த மனு:
ராமநாசபுரம் மாவட்டம், கடலாடி, வேப்பங்குளம் பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில், அரசு அனுமதியின்றி மணல் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குண்டாறுப் பகுதியிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுள்ளன. எனவே, அனுமதியின்றி மணல் அள்ளுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா, எல். விக்டோரியா கெளரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், பட்டா நிலங்களில் மணல் அள்ளியது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள வருவாய்த் துறை, போலீஸாா் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் மணல் அள்ளியவா்கள் குறித்து கண்டறிந்துள்ளனா். சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பட்டா நிலங்களில் மணல் கடத்தியது தொடா்பாக வருவாய்த் துறை, போலீஸாா் அடங்கிய குழுவினா் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.