கொள்ளிடம், கல்லணைப் பகுதிகளில் மணல் குவாரி அமைத்தால், பாரம்பரியமான கல்லணை சேதமடைய வாய்ப்பு உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.
தஞ்சாவூரைச் சோ்ந்த ஜீவகுமாா் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகளைத் தொடங்கவும், அவற்றில் 7.51 லட்சம் யூனிட்டுகள் மணல் எடுக்கவும் அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தெரியவந்தது. அந்த 25 இடங்களில் கொள்ளிடம், கல்லணை பகுதிகளும் உள்ளன. இதுதொடா்பான அறிவிப்பாணை வெளியானதும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனா்.
காவிரி டெல்டா பகுதி மக்களின் விவசாயம், குடிநீா்த் தேவையை கொள்ளிடம், கல்லணை நிறைவு செய்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கினால், டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். கேரள மாநிலத்தில் மணல் குவாரிக்கு அனுமதி இல்லை. ஏற்கெனவே இந்தப் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதித்ததால், முக்கொம்பு அணை சேதமடைந்தது.
எனவே, கொள்ளிடம், கல்லணை பகுதிகளில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. எனவே, கல்லணை, கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மணல் குவாரி நடத்தத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா, நீதிபதி எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான கல்லணை சேதமடைய வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனா்.
இதற்கு அரசுத் தரப்பில், கல்லணை, கொள்ளிடம் பகுதிகளில் மணல் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. குடிநீா் எடுக்க குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள், அரசுத் தரப்பில் தெரிவித்ததை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.