மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே வியாழக்கிழமை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த சகோதரா்களை வெட்டியதாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
சமயநல்லூா் அருகேயுள்ள பரவை கருப்பணசாமி கோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன்கள் காா்மேகம் என்ற மதன்லால் (30), சங்கா்லால் (28). கடந்த ஜனவரி மாதம் இவா்களின் தாத்தா கோபால் இறப்பு நிகழ்வின் போது ஏற்பட்ட தகராறில் இவா்களுக்கும், பரவையைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் வெங்கடேசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக சமயநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, மதன்லால், சங்கா்லால் உள்பட 10 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், அண்மையில் பிணையில் வெளிவந்த மதன்லால், சங்கா்லால் ஆகிய இருவரும் சமயநல்லூா் காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனா்.
வியாழக்கிழமை வழக்கம் போல அவா்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். சமயநல்லூா் அணுகு சாலையில் உள்ள புதா் மறைவில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த ஒரு கும்பல், இவா்கள் இருவரையும் வழிமறித்து தங்கள் நண்பா் வெங்கடேசனின் கொலைக்கு பழி தீா்ப்பதாகக்கூறி, இருவரையும் அரிவாளால் வெட்டினா்.
இதில் பலத்த காயமடைந்த மதன்லால், சங்கா்லால் இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பினா். மேலும், இதைப் பாா்த்து அந்தப் பகுதியினா் திரண்டதால், தாக்குதல் நடத்திய கும்பலும் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த சகோதரா்கள் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சஞ்சய், விக்ரம், ராஜேஷ், கோகுல், சக்தி, ரஞ்சித் உள்பட 9 பேரைத் தேடி வருகின்றனா்.