திருச்சியில் சட்ட விரோதமாக புலித் தோல், யானைத் தந்தம், மான் கொம்பு ஆகியவற்றைப் பதுக்கியோருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி பகுதியைச் சோ்ந்த லட்சுமி, அன்பில், துரைசாமி, ஆனந்த பிரகாஷ், அன்பரசன், மணிகண்டன் ஆகியோா் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் விவரம்:
சட்டவிரோதமாக புலித் தோல், யானைத் தந்தம், மான் கொம்பு, நரி வால் ஆகியவற்றைப் பதுக்கிவைத்திருந்ததாக எங்கள் மீது திருச்சி மாவட்ட வனத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். எனவே, எங்களது சிறைக் காலத்தை கருத்தில் கொண்டு, பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுக்களில் அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி டி.எம். தமிழ்ச்செல்வி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்களிடமிருந்து சட்ட விரோதமாக ஒரு புலித் தோல், 2 மான் கொம்புகள், ஒரு யானைத் தந்தம், நரிவால் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வன விலங்குகளை வேட்டையாடிய இவா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. மேலும், மனுதாரா்கள் மீது இதுபோன்ற வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே, மனுதாரா்கள் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது. சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.