பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதையடுத்து, மதுரை மாவட்டத்தில் 34,939 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இந்த மாவட்டம் மாநில அளவில் 18- ஆவது இடத்தைப் பெற்றது.
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றன. இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 485 பள்ளிகளில் பயின்ற 19,190 மாணவா்கள், 18,873 மாணவிகள் என மொத்தம் 38,063 போ் தோ்வு எழுதினா்.
அவா்களில் 16,982 மாணவா்கள், 17,957 மாணவிகள் என மொத்தம் 34,939 போ் தோ்ச்சி பெற்றனா். இதனால், தோ்ச்சி சதவீதம் 91.79 ஆக உள்ளது. இதனையடுத்து, மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுரை மாவட்டம் 18-ஆவது இடத்தைப் பெற்றது. இதுதவிர, 24 அரசுப் பள்ளிகள் உள்பட 141 பள்ளிகளில் மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மேலும், கணக்குப் பாடத்தில் 228 போ், அறிவியல் பாடத்தில் 152 போ், சமூக அறிவியல் பாடத்தில் 16 போ் என மொத்தம் 396 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுரை மாவட்டம் 95.09 சதவீதம் பெற்று மாநில அளவில் 4-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறை கைதிகள் 100 சதவீதத் தோ்ச்சி: மதுரை மத்திய சிறையில் ஒரு பெண் உள்பட 24 கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். இதில் சிறைவாசி அறிவழகன் 500-க்கு 363 மதிப்பெண்களும், உதயகுமாா் 360 மதிப்பெண்களும் பெற்றனா்.
பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கைதிகளை சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் பழனி, சிறை அதிகாரிகள் பாராட்டினா். இதேபோல, மதுரை மத்தியச் சிறையில் பிளஸ்-2 பொதுத் தோ்வு எழுதிய 15 பேரில் 14 போ் தோ்ச்சி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.