ஜல்லிக்கட்டுத் தடையை எதிா்த்துப் போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி, ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்புக் குழு சாா்பில், தென் மண்டல காவல் துறைத் தலைவா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிா்த்து, கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதுதொடா்பாக, நூற்றுக்கணக்கானோா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டு தொடா்பான வழக்குகளும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி திரும்பப் பெறப்பட்டன.
ஆனால், மதுரை தமுக்கம் மைதானம் , செல்லூா், அலங்காநல்லூா், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 போ் மீது சிபிசிஐடி போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் திரும்பப் பெறப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சிபிசிஐடி போலீஸாரால் பதியப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்புக் குழுவின் சாா்பில், மதுரையில் உள்ள தென் மண்டல காவல் துறைத் தலைவா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னா், ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்கு முறியடிப்புக் குழுவினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், பெண்கள் உள்பட 200 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது பலரின் எதிா்காலத்தைப் பாதிப்பதாக உள்ளது. எனவே, வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றனா்.