காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கிழக்கு - மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவா் பி. செல்லம்மாள் தலைமை வகித்தாா்.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி, மேலூா் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில், நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் ஒரே இடத்தில் உணவு தயாரித்து இதர மையங்களுக்கு அதை வாகனம் மூலம் அனுப்ப வேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஏற்கெனவே சமூக நலன், சத்துணவு திட்டத் துறை என்று இருந்ததை அரசு சமூக நலன், மகளிா் உரிமைத் துறை என்று மாற்றியதை ரத்து செய்து பழைய பெயரிலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்டச் செயலா் ஆ. அமுதா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் இரா. தமிழ் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலா் எஸ். பாண்டிச்செல்வி நிறைவுரையாற்றினாா்.