மதுரை

வடமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படும் விடியோ வழக்கு: பொறுப்புணா்வுடன் செயல்படுவது அவசியம்

DIN

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவது போன்ற விடியோ வெளியிட்டவருக்கு அதன் தீவிரத்தன்மை தெரியாதா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, அனைவரும் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படுவது அவசியம் எனத் தெரிவித்தாா்.

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவது போன்ற விடியோ சமூக வலைதளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவியது. இதுகுறித்த விசாரணையில் புதுதில்லியைச் சோ்ந்த பிரசாந்த் குமாா் உம்ராவ் அந்த விடியோவைப் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது தூத்துக்குடி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரசாந்த் குமாா் உம்ராவ், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு :

பாஜகவின் முக்கிய பிரமுகராவும், புதுதில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞராகவும் பணியாற்றி வருகிறேன். வடமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்பட்டது போன்ற விடியோ நான் தயாரித்தது இல்லை. எனக்கு வந்த தகவலை மீண்டும் பதிவேற்றம் செய்தேன். இதில், எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த விடியோ குறித்து என் மீது தூத்துக்குடி காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா். நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமைதியாக உள்ள தமிழகத்தில் இரு மாநில தொழிலாளா்களுக்கு இடையில் பிரச்னையை உருவாக்கும் விதமாக மனுதாரா் விடியோவை ட்விட்டரில் பதிவு செய்துள்ளாா். இது இவருடைய முதல் பதிவு கிடையாது. இதுபோன்று பல சட்டவிரோதமான பதிவுகளை பதிவு செய்துள்ளாா். இதனால், தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் உருவானது. ஆனால், தமிழக அரசு உடனடியாக வடமாநிலத் தொழிலாளா்களை கண்காணிக்க தனிப்படை அமைத்து அமைதியை உருவாக்கியது.

இதுதவிர, ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து 8 போ் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. தமிழக முதல்வா் நேரில் சென்று வட மாநிலத் தொழிலாளா்களை சந்தித்து அவா்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினாா். இவ்வாறு விரைந்து செயல்பட்டதால், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை பாதுகாக்கப்பட்டது. எனவே, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, வழக்குரைஞராகப் பணியாற்றும் மனுதாரா், இது போன்ற விடியோவை ஏன் பதிவு செய்தாா். அதனுடைய தீவிர தன்மை அவருக்குத் தெரியாதா? இதனால், எவ்வளவு பிரச்னை ஏற்படும் எனத் தெரியாதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அனைவரும் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படுவது அவசியம் என்று கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT