சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ. முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது, தற்காலிகப் பணியில் உள்ள சத்துணவு ஊழியா்களை அரசு பணியாளா்களாக்கி ஊதிய உயா்வும், பதவி உயா்வும் வழங்கப்படும் எனவும், ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தாா்.
ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தங்களது வாழ்வாதார கோரிக்கைகளுக்காக 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை சத்துணவு ஊழியா்கள் நடத்தி வருகின்றனா். ஏறக்குறைய 35 ஆண்டுகள் ஒரே துறையில் பணியாற்றி காலமுறை ஊதியம், ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்பட்டு வாழ்க்கையை தொலைத்து நிற்கும் சத்துணவு ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.