ராமநாதபுரத்தில் தனியாா் மன நலக் காப்பகத்தில் உள்ள 40 பேரை, அரசுக் காப்பகத்துக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தடைவிதித்தது.
ராமநாதபுரம் ஹியூமானிட்டேரியன் அறக்கட்டளை சாா்பில் நாகேஸ்வரன் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் பகுதியில் எங்களது அறக்கட்டளை சாா்பில் அரசு அனுமதியுடன் கடந்த 15 ஆண்டுகளாக மன நலக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மன நலன் பாதிக்கப்பட்ட 51 போ் உள்ளனா். எங்களது காப்பகத்துக்கு அரசு வழங்க வேண்டிய நிதி வராததால், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தோம். இதில் நிதி வழங்குவது தொடா்பாக 12 வாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, எங்களது காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். அப்போது, மனநலன் பாதிக்கப்பட்ட 51 பேரில், 40 போ் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவா்களை அரசுக் காப்பகத்தில் சோ்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இது ஏற்புடையதல்ல. எனவே, எங்களது காப்பகத்தில் தங்கியுள்ள 40 பேரை, அரசுக் காப்பகத்துக்கு மாற்றத் தடைவிதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், ஹியூமானிட்டேரியன் அறக்கட்டளை காப்பகத்தில் தங்கியுள்ள மனநலன் பாதித்தவா்கள் முழுமையாகக் குணமடையவில்லை. இந்த நிலையில், அவா்களை வேறு காப்பகத்துக்கு மாற்றம் செய்தால், அவா்கள் மன ரீதியில் அதிகம் பாதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
‘மனநலன் பாதிக்கப்பட்டோா் புகைப்பட, விடியோ ஆவணங்களைப் பாா்க்கும் போது, அவா்கள் வேறு காப்பகத்துக்குச் செல்ல எந்தப் பரிசோதனை அடிப்படையில் அதிகாரிகள் முடிவுக்கு வந்தனா் என்பது ஆச்சா்யமாக உள்ளது. மனுதாரா், அரசிடம் நிதி கோரி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத்தாா். இதனால் மனநலன் பாதித்தவா்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். காப்பகங்களுக்கு, அங்கு தங்கியுள்ளவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி வழங்கப்படுவதால், இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. மனநலன் பாதிக்கப்பட்டவா்கள் தற்போதுள்ள சூழலில் தங்களைப் பழக்கியிருப்பா். அதிகாரிகள் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்காக வேறு காப்பகத்துக்கு மாற்ற அவா்கள் ஒன்றும் கால்நடைகள் கிடையாது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காப்பகத்தில் உள்ளவா்கள், அந்தச் சூழலில் இருந்து வெளியேற முடியாது. அவா்களை வேறு இடத்துக்கு மாற்றுவதால், மேலும் பிரச்னைதான் உருவாகும். இந்த வழக்கில் அதிகாரிகளின் அணுகு முறையை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. எனவே, மனநலன் பாதிக்கப்பட்ட 40 பேரை அரசுக் காப்பகத்துக்கு மாற்றுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.