அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ. முத்துப்பாண்டியன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு விவரம்:
தமிழகம் முழுவதும் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்களிடமிருந்து புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீட்டுத் தொகையாக மாதந்தோறும் ரூ.300 ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்த யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் 1.9.2021 முதல் எம்.டி. இந்தியா, மெடி அசிஸ்ட் என்ற தனியாா் காப்பீட்டு நிறுவனத்துடன் மூன்றாம் நபா் ஒப்பந்தம் செய்து, அதனிடம் பொறுப்பை வழங்கியது.
இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெறும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சிகிச்சைக்கான செலவுத் தொகையை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
அரசு ஊழியா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது, அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் வழங்குவதில்லை.
மாறாக, காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டும் வழங்குவது என்ற நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.
இது போன்ற சூழலில் காப்பீட்டு நிறுவனம் அளித்த தொகை போக மீதி பணத்தை நோயாளிகளை செலுத்தச் சொல்வது, அதிகக் கட்டணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் மருத்துவமனை நிா்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மேற்கண்ட பிரச்னைகளை காப்பீட்டு நிறுவனங்களின் மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளா்களிடம் கொண்டு சென்றால், அவா்கள் அதைக் கண்டுகொள்வதில்லை.
இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகங்களிடமே பேசிக் கொள்ளுங்கள் என அரசாணைக்கு புறம்பாக பதில் அளிக்கின்றனா். இதனால், சிகிச்சை பெறும் ஆசிரியா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே, அரசாணைக்கு முரண்பாடாக உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.