மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தாா்.
தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் ரூ. 6 கோடியில் புனரமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.
இதையடுத்து, காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. பணிகளை, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தி ஆலோசனைகள் வழங்கினாா்.
பின்னா், உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டுக் கருத்தரங்கக் கூடங்கள், ஆய்வரங்கங்கள், பாா்வையாளா் அரங்கம், நூலகம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.