மதுரை செல்லூா் அம்பேத்கா் நகரில் கபடி விளையாட்டு மைதானம் அமைக்கும் முடிவை மாநகராட்சி நிா்வாகம் பரிசீலிக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை முனிச்சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் 4-இல் மக்கள் குறைதீா் முகாம் மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கே. ஜே. பிரவீன்குமாா் முன்னிலை வகித்தாா்.
முகாமில் செல்லூா் அம்பேத்கா் நகரச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம் :
செல்லூா் அம்பேத்கா்நகரில் பறையா் சமுதாய மக்களும், சிவன் கோயில் தெருவில் பள்ளா் (தேவேந்திர குல வேளாளா்) சமுதாய மக்களும் சுமாா் 300 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இந்த நிலையில், எங்கள் பகுதியில் உள்ள மொட்டையன் ஊருணியின் ஒரு பகுதி கிழக்கு புறம் செல்லூா் சந்தையாகவும், மற்றொரு பகுதி மண்ணணெய் விற்பனை நிலையமாகவும் உள்ளது. இதற்கு இடையே காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் தற்போது விளையாட்டு அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊருணியில் காலியாக உள்ள பகுதியில் கடந்த 2006-ஆம் ஆண்டு கபடிப் போட்டி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பறையா் சமுதாய இளைஞா்கள் 3 போ் கொலை செய்யப்பட்டனா். அதே இடத்தில் மீண்டும் விளையாட்டு மைதானம் அமைத்தாலும் மீண்டும் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, கபடி விளையாட்டு மைதானம் அமைக்கும் முடிவை பரிசீலனை செய்து எங்கள் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலியாக உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம், கழிப்பறை, நூலகம் போன்றவற்றை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரியிருந்தனா்.